சிவபெருமானை அவமானம் செய்யும்பொருட்டு தட்சன் அவரை அழைக்காமல் ஒரு யாகம் செய்தான். அதற்கு பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட இந்திராதி தேவர்களை எல்லாம் அழைத்தான். அதனால் கோபம் அடைந்த சிவபெருமான் வீரபத்திரரையும், காளியையும் ஏவி அனைவரையும் தண்டித்தார். தனது தவறை உணர்ந்த அக்னி பகவான் இத்தலத்திற்கு வந்து லிங்கம் அமைத்து, தீர்த்தம் உண்டாக்கி அபிஷேகம் செய்து, வன்னி இலைகளால் அர்ச்சித்து வழிபட்டு பேறு பெற்றான்.
வன்னி மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இத்தலம் 'வன்னியூர்' என்று பெயர் பெற்றது. அக்னி வழிபட்டதால் இத்தலத்து மூலவருக்கு 'அக்னீஸ்வரர்' என்ற திருநாமம் ஏற்பட்டது. அதனால் இத்தலம் 'அக்னியூர்' என்றும் பெயர் பெற்று பின்னர் மருவி 'அன்னியூர்' என்றும் அழைக்கப்படுகிறது.
இத்தலத்து மூலவர் 'அக்னீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சிறிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'கௌரி பார்வதி' என்னும் திருநாமத்துடன், சிறிய வடிவில் அழகாக காட்சி தருகின்றாள்.
சிறிய கோயில். ஒரு பிரகாரம் மட்டும் உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், பாலசுப்ரமண்யர், மகாலட்சுமி, சனீஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். |